கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் பொழுது அதிமுகவிற்கு ஆதரவாக தேனியில் பரப்புரையில் ஈடுபட்ட நகைச்சுவை நடிகர் வையாபுரியை பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்பொழுது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வையாபுரி 100 ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் வையாபுரி மீது போடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் வையாபுரியும் பங்குபெற்றார். இதில் நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை கேட்டு கோர்ட் வளாகத்திலேயே நிம்மதி பேச்சுமூச்சு விட்டார் வையாபுரி.