தேனி அருகே புது மாப்பிள்ளை உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள மலைய கவுண்டன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முருகனின் மகன், சௌந்தரபாண்டி என்பவருக்கும் மதுரையைச் சேர்ந்த வேல்விழி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களிடையிலான கருத்து வேறுபாடு காரணமாக வேல்விழி தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சவுந்தரபாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் தேனி அருகே வசிக்கும் குமரேசன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. இதனை அடுத்து அவர் பாதிப் பணத்தைக் கொடுத்து விட்ட நிலையில் மீதிப் பணத்தையும் கேட்டு நிர்வாகம் மிரட்டி வந்ததால் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தேனி அரண்மனை புதூரை சேர்ந்த தங்கவேல் கட்டட வேலை பார்த்து வந்தார். திருமணமாகி சில வருடங்களிலேயே மனைவி பிரிந்து விட்டார். இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் சம்பவத்தன்று விரக்தியின் உச்சத்தில், அளவுக்கு அதிகமாக மது குடித்து உயிர் இழந்தார். இதுகுறித்து தேனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள நாராயணி தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.