ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் விரைவில் தான் கைது செய்யப்படக்கூடும் என்று நினைத்த ராஜேந்திரபாலாஜி சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இந்நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து அவரை தீவிரமாக மாவட்ட காவல்துறை தேடி வருகிறது.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் தற்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் சிறப்பு அமர்வு அமைத்து தன்னுடைய முன்ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்காத நிலையில், கடந்த 12 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரோடு தொடர்பில் இருந்த முக்கிய இரண்டு அதிமுக நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விசாரணையில் வேலூர், கிருஷ்ணகிரியில் ராஜேந்திர பாலாஜி மறைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.