தேனி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்று வருவதை பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்கு தெரியவர அடுத்த நாளே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்த மாற்று சமூகத்தினரின் வீட்டை அடித்து நொறுக்கி பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று (27.01.2020) காலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (27.01.2020) பிற்பகல் 03.00 மணியளவில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர் காவல் துறையிடம் புகார் கொடுத்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ஒரே சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் உடபட 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயபால் என்பவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பின் உயர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அதேபோல் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 70 வயது பெருமாள் என்ற முதியவரை தாக்கியதாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகக் கூறி தேனி- திண்டுக்கல் சாலையில் இறந்தவரின் உடலை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து தேனி, பெரியகுளம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தேனி- திண்டுக்கல் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.