தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் பாலகோம்பையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்துவிட்டு, முன்விரோதத்தில் மர்ம நபர்கள் வைத்ததாக நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள பாலகோம்பையைச் சேர்ந்தவர் சூரியன். இவர், கொழிஞ்சிபட்டி சுடுகாடு அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து ஆட்டுக் கொட்டகை அமைத்திருந்தார். இதனால் இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, சின்னச்சாமி ஆகியோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி, சின்னச்சாமி ஆகியோர் சூரியன் ஆக்கிரமிப்பு செய்து அமைத்த ஆட்டுக் கொட்டகையை சேதப்படுத்தினர்.
அப்போது அங்கு 3 வெடிகுண்டுகள் இருந்தன. தகவலறிந்து வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். விசாரணையில் எதிரிகளைப் பழி வாங்குவதற்காக சூரியன் ஆட்டுக்கொட்டகையில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வைத்து நாடகமாடியது தெரியவந்தது. நாட்டு வெடிகுண்டு வைத்து நாடகமாடிய சூரியன் மற்றும் பிரச்சனை ஏற்படுத்திய முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.