Skip to main content

“நடிகர் பிரித்விராஜை கைது செய்ய வேண்டும்..” முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

"Actor Prithviraj should be arrested ..." PR  Pandian at the Mullai Periyar  issue

 

“உச்ச நீதிம்னறத்தை அவமதிக்கும் நோக்கத்தோடு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் நோக்கத்தோடு கேரள மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை மந்திரி ராஜன் செயல்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு 2018ஆம் ஆண்டில் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளாவுக்குத் திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதி கண்டிக்கத்தக்கது” என தமிழக அணைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர். பாண்டியன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மோடி அரசு 2018இல் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளாவுக்குத் திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதி கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பை வழங்க மத்திய அரசு மறுப்பதன் மர்மம் என்ன? அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஆக்கிரமித்து சொகுசு விடுதிகள் கட்டியுள்ள திரைப்பட நடிகர்கள், கேரள அரசியல்வாதிகள் திட்டமிட்டு, அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கினால் அவர்களது சொகுசு விடுதிகள் மூடிவிடும் என்பதைப் பாதுகாப்பதற்காக அணை பலம் இழந்துள்ளது என்று விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. 

 

வலைதளத்தில் பெரியாறு அணை குறித்து தவறான தகவலைப் பதிவுசெய்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜை கைது செய்ய வேண்டும். பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்கின்ற இணையதளங்கள் முடக்கப்பட வேண்டும். பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். 999 ஆண்டுகள் குத்தகை உரிமை உள்ள நமக்குத்தான் அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதி உள்ளது. கேரள அரசிடம் அனுமதி கேட்டது தவறு. ‘ரூல் கர்வ்’ முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கட்டுப்படுத்தாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக கேரளாவில் உள்ள சதிகாரர்களால் உருவாக்கப்பட்டது ‘ரூல் கர்வ்’.  

 

மத்திய நீர்வள ஆணையம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையைப் பலப்படுத்த வேண்டும். பேபி அணையைப் பலப்படுத்த இடையூறாக உள்ள மரங்களைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளுடன் இணைந்து முல்லைப் பெரியாறு அணையைக் காக்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தேனி மாவட்டத் தலைவர் செல்வகுமார், கூடலூர் விவசாயிகள் சங்கம் செங்குட்டுவன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் கொடியரசன், ஜெயபால், 18ஆம் கால்வாய் தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்