போடி, பழைய பஸ் நிலையம் அருகில் வ.உ.சி.யின் சிமெண்ட் சிலை இருந்தது. அதனை மாற்றி அமைக்கும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெண்கலச் சிலை உருவாக்கப்பட்டது. அப்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக அனுமதி கிடைக்காததால், வைத்த சிலையை அகற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது ஐக்கிய பிள்ளைமார் சங்கம் சார்பில் முழு உருவ வெண்கலச் சிலை புதிதாக உருவாக்கப்பட்டு, போடி பழைய பஸ் நிலையம் அருகில் கப்பல் வடிவத்தில் பீடம் எழுப்பி, வ.உ.சி. சிலையை நிறுவுவதற்கு முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டது.
அச்சிலை திறப்புக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று (24.02.2021) மாலை சரியாக 6.40 மணி அளவில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் பஸ் நிலையத்திலிருந்து பி.எச்.சாலை வழியாக தாரை தப்பட்டையுடன் அழைத்து வரப்பட்டனர். அதன்பின் பீடம் முன்பாக சமூதாயக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பீடத்திற்குள் நுழைந்து வ.உ.சி. சிலையைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, பூக்கள் தூவி மேடைக்குச் சென்று அமர்ந்தார் ஓ.பி.எஸ்.
அப்போது, கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் தலைமையில் வாலிபர்கள் மேடைமுன் திரண்டு முற்றுகையிட்டு, “ஓ.பி.எஸ். ஒழிக.. ஒழிக..” என கோஷம் எழுப்பினர். மேலும், “வேளாளரும் நாங்களே, வெள்ளாளரும் நாங்களே. இதை மற்ற சமுதாயத்தினருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வராக உள்ள உங்களுக்கும் (ஓ.பன்னீர்செல்வம்) என்ன உரிமை இருக்கிறது” எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து “ஓ.பி.எஸ். ஒழிக.. ஓ.பி.எஸ். ஒழிக..” என கண்டன கோஷம் தொடர்ந்து எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபரீதம் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் மளமளவென கூட்டத்தில் பிரச்சனை எழுப்பியவர்களை அடித்து விரட்டினர். அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இரண்டு பெண்களையும் சில வாலிபர்களையும் அடித்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.