தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, அதன்மூலம் மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மைகளை மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற முழக்கங்களோடு இன்று காலை திருவாரூர் மாவட்டம் புலிவலம் என்ற கிராமத்தில் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
ஆனால், திமுக தலைமையின் திட்டமிடலுக்கு மாறாக, தேனி மாவட்டம், தேனி ஒன்றியம் கொடுவிலார் பட்டி ஊராட்சியில் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் நேற்று 8 ஆம் தேதி மாலையே கிராமசபைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
அவருடைய இந்த நடவடிக்கை அந்த மாவட்ட நிர்வாகிகளுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அவருடைய ஆதரவாளர்களோ, கிராமசபைக் கூட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அப்படியே ஒரு கிராமத்தில் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதில் பங்கேற்றார் என்றும் ஆதரவாளர்கள் கூறினார்கள்.
ஆனால், 9 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை என்று திமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில் ஒரு மாவட்டப் பொறுப்பாளரே இப்படி நடந்துகொள்ளலாமா என்று இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.