திரையரங்கில் திருட்டு வீடியோ எடுப்பதை தடுக்க திரைப்பட உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி, தஞ்சை ஏரியா உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.மீனாட்சிசுந்தரம் தொடர்ந்துள்ள வழக்கில், திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிடப்படும்போது அவற்றை பார்க்க வருபவர்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடுவது தொடர்பாக திரையரங்குகள், உரிமையாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, கைது செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டருக்கு வரக்கூடிய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பொறுப்பேற்க முடியாது என்றும், ஒவ்வொரு திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று தடுப்பது சாத்தியமில்லாத விஷயம் என்றும், யாரோ செய்யும் தவறுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர்களின் புகாரின் அடிப்படையில் தியேட்டர் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருட்டு வீடியோ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் திரைப்பட உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன், அதற்கு 2 வார கால அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.