சென்னை டூ கோழிக்கோடு தங்கநாற்கர சாலை சிறிபெரும்புதூர், காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி வழியாக செல்கிறது. இதில் வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த சாலையில் அதிகமாக வாகன விபத்துக்கள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆம்பூர் நகரத்தில் தினம் தினம் விபத்து நடக்கின்றன.
இன்று செப்டம்பர் 14ந்தேதி காலை ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலைக்கு திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி பகுதியில் இருந்து 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்துக்கொண்டுயிருந்தது. ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் என்கிற பகுதி அருகே வந்தது. அப்போது பாலாற்றில் இருந்து மணல் திருடி எடுத்து வந்து கொண்டுயிருந்த ஒரு மாட்டு வண்டி மீது வேன் மோதியது.
இதில் மாட்டு வண்டியை இழுத்து வந்த இரண்டு மாடுகள் சம்பவ இடத்தில் பலியானது. வேன் உள்ளே அமர்ந்திருந்த தொழிலாளர்கள் முன் சீட்டுகளில் மோதியும், கீழே விழுந்ததில் 10 பேர் காயம்மடைந்தனர். காயம்மடைந்த தொழிலாளர்களை அப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாட்டு வண்டி ஓட்டிவந்தவருக்கும் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.