கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கொரட்டாங்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மது பாட்டில் வாங்குவதற்காக அக்கம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் நிறையபேர் வந்து செல்வார்கள். இந்தக் கடையில் கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உதவியாளராகவும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் விற்பனையாளராகவும் பணியில் இருந்தனர். நேற்று இரவு கடையில் விற்பனையான பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கணக்கை முடித்து, கடையை மூடும்போது திடீரென பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள், இருவரையும் கத்தியால் வெட்டி கடையின் சாவியைப் பிடுங்கி, பணத்தைக் கொள்ளையடித்துச் செல்ல முயன்றுள்ளனர். மர்ம நபர்களால் வெட்டுப்பட்ட ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், டாஸ்மாக் கடையின் அருகில் பார் நடத்தி வந்த ஊழியர்களும் கொள்ளையர்களை துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள்மீது கொள்ளையர்கள் மிளகாய் பொடியை வீசிவிட்டு நான்கு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விற்பனையாளர் கதிரவன் மற்றும் உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தின்போது டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் வசூலான 3 லட்சத்து 27 ஆயிரத்து 250 ரூபாய் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதே டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஆசனூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களைக் கடந்த மாதம் கத்தியால் வெட்டி விட்டு ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படிக் கடந்த இரு மாதங்களாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. போலீசார், கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள் டாஸ்மாக் அலுவலர்கள்.