தேசிய நெடுஞ்சாலையில் பட்ட பகலில் சரக்கு வாகனங்களை திருடுவதும், வாகனங்களில் இருந்து பொருட்களை திருடுவதும் தொடர் கதையாகி வருகிறது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அதனை குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நீண்ட தூரம் பயணித்து வந்ததால் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சாலையோரம் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் உறங்கிக் கொண்டிருந்தார்.
பிறகு தூங்கி எழுந்தவர், சரக்கு லாரியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன் சரக்கு லாரியின் சக்கரத்தை செக் செய்ய லாரியை சுற்றி வந்து பார்த்துள்ளார். அப்போது, பார்சல் சர்வீஸ் லாரியின் பின்பக்கத்தை பார்த்த குமார், லாரியின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததையும், பார்சல்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுப்பற்றி பள்ளிக்கொண்டா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரில் லாரியில் இருந்த பெட்டிகளில் 20 பெட்டிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதில், விலை உயர்ந்த ஜெர்கின்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் மதிப்புயிருக்கும் எனக்குறிப்பிட்டுதள்ளதாக கூறியுள்ளனர். இந்த புகாரை பெற்ற காவல்துறையினர், இதுக்குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு வாலாஜா அடுத்த பூட்டுதாக்கு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரியை 5 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றது குறிப்பிடதக்கது. இதனை உடனடியாக காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் கடந்து செல்கின்றன என்கிறார்கள் ஓட்டுநர்கள். தற்போது வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சரக்கு வாகனங்கள் கடத்தல், பொருட்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.