புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், பொன்னமராவதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களுக்குள் 10 க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை கவலைப்பட வைத்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்கள் இன்னும் பிடிபடவில்லை.
இந்நிலையில் இன்று காலை கீரமங்கலத்திலிருந்து நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரேகா, ஆவணம் சிவன் கோவில் அருகே சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ஆசிரியை கழுத்திலிருந்த சங்கிலியைப் பறிக்க, பதறிய ஆசிரியை சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்ததில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அங்கிருந்து தப்பிச் சென்ற வழிப்பறி திருடர்கள் நெடுவாசல் கூட்டுறவு அங்காடி அருகே சென்ற மூதாட்டி அலமேலு கழுத்தில் கிடந்த (கவரிங்) சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே உள்ள குளத்தில் வைத்து ஏற்கனவே திருடி வந்த பொருட்களை பிரிக்கும் போது அப்பகுதி இளைஞர்கள் விரட்ட மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். கிராம பொதுமக்கள் இணைந்து தப்பி ஓடிய திருடர்களை தேடிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் விருதுநகர் மாவட்டம் வலையங்குளம் மாங்காரம்பாறை மலைச்சாமி மகன் செல்வேந்திரன் (29), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கழுகுமலை சி.ஆர் காலணி கந்தசாமி மகன் ரஞ்சித் (34) என்பது தெரிய வந்தது. இருவரையும் பிடித்து வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களிடம் முறையாக விசாரித்தால் ஏராளமான திருட்டு சம்பவங்கள் பற்றித் தெரிய வரும் என்கிறார்கள்.