தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கலைஞருடைய நூறு ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடக்கூடிய ஒன்றிய அரசுக்கு தன்னுடைய நன்றி. மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் அனைவரையும் அழைக்கிறேன்.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் இயங்கிய ஆற்றல்மிக்கவராகவும் இந்திய அரசியல் வரலாற்றில் சமத்துவமிக்க ஆளுமையாகவும் திகழ்ந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். எதிர்காலத் தலைமுறையினரும் கலங்கரை விளக்கமான தலைவரின் புகழ் மகுடத்தில் மற்றும் ஒரு வைரமாக அவருடைய உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், கலைஞருடைய மகனாகவும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. சென்னை கலைவானர் அரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.