நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கிய போது அதனைச் சுற்றியுள்ள வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் போராட்டம் நடந்தது.
இதில் கீரமங்கலத்தில் நடந்த போராட்டத்தின் போது மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னால் உள்ள சிவனிடம் தர்க்கம் செய்த தலைமைப் புலவர் நக்கீரருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலையியிடம் நீதி வேண்டும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சரின் அறிவிப்பை பார்த்த போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதாக புலவர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, கடவுள் சிவனிடமே தர்க்கம் செய்த இடம் இந்த நக்கீரமங்கலம். அதனால் தான் நீதிக்காக வாதாடிய தலைமைப் புலவர் நக்கீரருக்கு கீரமங்கலததில் சிலை வைத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல நாட்கள் போராடினோம். பிறகு நக்கீரரிடம் மனு கொடுத்தோம் வெற்றி கிடைத்தது.
அதேபோல நெடுவாசல் போராட்டம் நடந்தபோதும் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஊர்வலமாக வந்து நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்தோம். அதற்கு நீதி வழங்கி இருக்கிறார் நக்கீரர். அதனால் தான் இன்று அவருக்கு நன்றி சொல்லவும் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தோம் என்றனர்.