சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடக பிரச்சனையில் கர்நாடக அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளனர். இங்கேயும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதிமுக தீர்மானத்தைக் கொண்டுவந்தபோதெல்லாம் திமுக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஆதரித்து வந்தது. அதேபோல் நாங்கள் கொண்டுவந்த நேரத்தில் அவர்களும் (அதிமுக) ஆதரித்திருக்கிறார்கள். நான் எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். நான் 89லிருந்து காவிரி பிரச்சனையோடு இருக்கிறவன். அந்த ஏக்கத்தோடு கேட்கிறேன். நமக்குள் ஆயிரம் இருக்கலாம். நீங்கள் யோக்கியனா நான் யோக்கியனா எனச் சண்டை பிடிக்கலாம். யாராக இருந்தாலும், நான் உட்பட இந்தக் காவிரி பிரச்சனையில் நீ என்ன பண்ண... நான் என்ன பண்ண... எனப் பேசுவதை விட்டுவிட வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நானே இந்தத் தவறை செய்திருக்கிறேன். என்னுடைய வாலிபப் பருவம் காரணமாக அப்படி பேசியிருக்கலாம். இப்பொழுது மெஜ்ஜூரிட்டி வந்திருக்கலாம், பொறுப்பு வந்திருக்கலாம். இனியும் காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால சமூகம் நம்மைச் சபிக்கும்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து தீர்மானம் குறித்துப் பேசிய தமிழக முதல்வர், ''தமிழ்நாட்டு உரிமையில் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றிபெறுவோம். மேகதாது விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளைத் திமுக அரசு மேற்கொள்ளும். அனைத்துக் கட்சிகளும் ஒரணியாக நின்று தீர்மானத்தை ஆதரித்ததற்கு நன்றி. எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தமிழக அரசு தடுக்கும். மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்ற நமது எதிர்ப்பு ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனைத் தமிழக அரசு நிச்சயம் பாதுகாக்கும்'' என்றார்.