
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தது. இத்தகைய சூழலில் சென்னையில் நாளை (18.08.2024 கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
கலைவானர் அரங்கில் நடக்கவிருக்கும் இதற்கான விழா ஏற்பாடுகளைத் தமிழக அரசு கவனித்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து விழாவை நடத்துவது போல இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசியல்கட்சிகளின் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விழாவை பிரமாண்டப்படுத்தவும், விமர்சையாக நடத்தவும் அரசு அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதே சமயம் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். நாளை (18.08.2024) நடைபெறவிருக்கிற நிகழ்ச்சி வெற்றி பெறட்டும், மகிழ்ச்சி பரவட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.