தஞ்சை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 28). இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறைத் தண்டனை முடிந்து சமீபத்தில் தமிழரசன் வெளிவந்துள்ளார். சிறைத் தண்டனை முடிந்து வெளிவந்த பின்னரும் தொடர்ந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து நாச்சியார்கோவில் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் இவரை கைது செய்ய கும்பகோணம் நீதிமன்றம் கைது ஆணை ஒன்றையும் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி, உதவி ஆய்வாளர் ஈஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், சாக்கோட்டை கடைவீதியில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழரசனை கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோரின் வலது கையை கடித்துவிட்டு தமிழரசன் தப்ப முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் திரும்பவும் தமிழரசன் பிறரைக் கடித்து விடாமல் இருக்க அப்போது அங்கு இருந்த ஒருவரின் ஹெல்மெட் ஒன்றை வாங்கி தமிழரசன் தலையில் அணிவித்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.