10 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் தலையில் பெரும் காயத்துடன், ஈக்கள் மொய்க்க சுயநினைவின்றி கிடந்த முதியவரை கைஃபா இளைஞர்கள் மீட்டு தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்த்தில் நீர்நிலைகளை சீரமைப்பதற்காக கடைமடை பாசனமுள்ள 4 தாலுகா இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு கைஃபா. பேராவூரணி உள்பட பல கிராமங்களில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளை சொந்த செலவிலும், நன்கொடைகள் பெற்றும் சீரமைத்து வருகிறார்கள். இளைஞர்களின் இந்தப் பணியை பொதுமக்கள் மட்டுமின்றி ஆட்சியர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அவர்களின் அடுத்தகட்டமாக ஆதரவில்லாமல் கிடந்த முதியவரை மீட்டு தனியார் காப்பகத்தில் சேர்த்தது.
பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஒரு முதியவர் கடந்த 10 நாட்களாக தலையில் காயத்துடன் படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவரைப் பற்றிய விபரங்களைக் கூட அவரால் சொல்ல முடியவில்லை. அவரை மீட்டு ஏதாவது காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று கைஃபா இளைஞர்களிடம் பேசிய பேராவூரணி உதவி ஆய்வாளர் அருள்குமார் தான் அவசரமாக வெளியில் செல்வதாக கூறினார்.
இந்த தகவலையடுத்து அங்கே சென்ற நிமல் ராகவன், ரமேஷ்குமார், கார்த்திகேயன், வேலுச்சாமி, மாரி கிரிஷ், ராவனா உள்ளிட்ட கைஃபா இளைஞர்கள் அந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில் காயத்திற்கு மருந்து வைத்துக் கொண்டு அவரை குளிக்க வைத்து சுத்தம் செய்து புதிய உடைகள் கொடுத்து கொட்டும் மழையில் பாருக்கின் ஆட்டோவில் சென்று அறந்தாங்கி அருகில் அழியாநிலையில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர். காப்பக நிர்வாகி சந்திரசேகரன் அன்போடு அழைத்துக் கொண்டார். இவரின் உறவினர்கள் யாராவது வந்தால் அவரை அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
முதியவரை காப்பகத்தில் சேர்த்த பிறகு ஆட்டோவுக்கு வாடகை எவ்வளவு என்று இளைஞர்கள் கேட்க.. ஒரு உயிரை காக்க நீங்க வந்தது போல அந்த உயிரைக் காக்க என் பங்கும் இருந்தது என்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. எனக்கு வாடகை கொடுத்து பிரித்துப் பார்க்க வேண்டாம். எப்போதும் இப்படி ஒரு பணிக்கும் என்னை அழைத்தால் உடனே வருவேன் என்று சொல்லி நெகிழ வைத்தார் ஆட்டோக்காரர்.
மீட்கப்பட்ட அந்த முதியவரால் முழுமையாக பேச முடியவில்லை என்றாலும் தன் பெயர் மெய்யப்பன் என்றும், ஊர் பேராவூரணி அருகில் உள்ள கள்ளங்காடு என்பது மட்டும் சொல்கிறார். மற்றபடி அவரால் ஏதும் பேச முடியவில்லை. இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உறவினர்களுக்கு சொன்னால் அவர்கள் அவரை வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
ஒரு உயிரை மீட்ட கைஃபா இளைஞர்களுக்கு நக்கீரனும் வாழ்த்துகிறது.. தொடரட்டும் மக்கள் பணி.