ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் அமமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
தேனி ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் ஒரு தபால் வாக்கு சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 மணிநேரம் சோதனை நடத்தியதில் ரூபாய் 1.48 கோடியும் 94 பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல் எண்ணுடன் வைக்கப்பட்டிருந்ததாகவும், வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை வைத்து அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட 7 பிரிவுகளில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேனி அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில்,
நேற்று மாலையே பிரச்சாரம் முடிந்துவிட்டது. எங்கள் மீது குற்றச்சாட்டு வந்திருக்கு அதனால் விளக்கம் சொல்கிறேன். அந்த அலுவலகம் அதிமுக பிரமுகரின் அலுவலகம் அதற்கு கீழே அமமுக வேட்பாளர் ஜெயக்குமாரின் அலுவலகம் இருக்கிறது. அவர்கள் பணம் எடுத்தது கமர்சியல் பில்டிங்கின் ஒரு பகுதியில் பணம் எடுக்கப்பட்டது. இது அதிமுககாரர்களே வைத்து ஜோடித்த நாடகம் எங்கள் மீது குற்றச்சாட்டு வர இப்படி செய்துள்ளார்கள்.
நான்கு நாட்களாக தேனியில் ஓபிஎஸ் மகன் எல்லா வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ ஆதாரம் நிறைய இருக்கிறது. அமைச்சர் பேசியது, ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பம் 1000 ரூபாய் கொடுத்தது என நிறைய வீடீயோக்கள் இருக்கிறது. யாரையாவது கைது சொல்ல சொல்லுங்க பார்ப்போம் எனக்கூறினார்.