அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்கள் என நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மணிநேரமாக சோதனை நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக தலைமை இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. அதிமுக செல்வாக்கு வளர்வதைக் கண்டு பொறுக்கமுடியாத திமுக அரசு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், ''தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவுடன் நேரடியாக மோத முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறது திமுக அரசு'' என்றார்.