பாமக நிறுவனர் ராமதாஸ் ‘தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை சென்னையில் இருந்து நேற்று (21.02.2023) தொடங்கினார். இதற்கான தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராமதாஸ் எழுதிய ‘எங்கே தமிழ்?’ என்ற நூலை விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் வெளியிட, டில்லி தலைநகர் தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், "தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழைத் தேடி நான் போகிறேன் என்று சொல்வதை விட நாம் அனைவரும் செல்கிறோம் என்பதுதான் சரியாக இருக்கும். தமிழ் என்றும் நிலைத்து நிற்கும், நிலைத்து நிற்கும் என்று நம்புகிற அனைவரும் என்னுடன் மதுரை வரை வர இருக்கிறார்கள் . இந்த நாள் உலக தாய்மொழி நாள் (21.02.2023) ஆனாலும், இன்றைக்கு தமிழ் எங்கு இருக்கிறது? நீதிமன்றத்தில், தோட்டத்தில், பள்ளிக்கூடத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் 5 கோடி ரூபாய் பரிசளிக்கிறேன். என்னிடம் 5 ஆயிரம் கூட இல்லை. ஆனாலும் என் தலையை அடகு வைத்தாவது கொடுக்கிறேன். எனக்கு தெரியும், யாராவது சொல்லுவார்கள் என்றால் யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்லும் திறன் யாருக்கும் இல்லை. அப்படி சொல்கிறார்கள் என்றால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். தமிழ் மொழி எந்த மொழிக்கும் எதிரி அல்ல.
நங்கள் இந்திய தலைநகரத்தில் ஆட்சி மொழி மாநாடு ஒன்றை நடத்தினோம். அப்போது 8வது அட்டவணையில் 18 மொழிகள் இருந்தன. தற்போது 22 மொழிகள் 8வது அட்டவணையில் இருக்கின்றன. அழைப்பிதழை 18 மொழிகளில் அச்சடித்தோம். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதனைக் கண்டு மகிழ்ந்தார். தமிழைப் பாதுகாக்க தமிழோசை நாளிதழ் நடத்துகிறோம். பல்வேறு தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தியது, பாலியல் வன்கொடுமை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியது உட்பட பல மாற்றங்கள் இன்றும் செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழிசை ஆதி இசை. உலகத்தின் முதல் இசை தமிழிசை. மாவட்ட தலைநகரங்களில் செய்த சாதனைகள் ஏராளம். இசையின் இசை என்ற புத்தகம் வெளியிட்டுள்ளோம். பாரதியாரின் நண்பர் நீலகண்ட சாஸ்திரி தமிழ் இனி மெல்லச் சாகும் என்றார். தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது.
இன்றிலிருந்து பிறமொழி சொற்கள் கலப்பில்லாமல் பேச வேண்டும். அவ்வாறு பேசிப் பழகுங்கள். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் நுழைந்துள்ளது. ஆனால், நம்முடைய தமிழ் மொழியில் அதிகம் கலந்துள்ளது. ஹலோ என்பதற்கு பதிலாக வணக்கம், அய்யா என்றும், தேங்க்யூ என்பதற்கு நன்றி என்றும், ஓகே என்பதற்கு தமிழில் சரி என்று என்றும் சொல்லி பழகுங்கள். தெலுங்கில் பேசுபவர்கள் தூய தெலுங்கிலேயே பேசுங்கள். அவரவர் தாய்மொழியில் பிறமொழி கலப்பின்றி பேசுங்கள்" எனக் கூறினார்.