ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி உட்பட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கட்டிமேட்டில் கைது செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, மாலை 6 மணிக்கு பதாகை ஏந்திடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அவரை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு இடையே உள்ள கட்டிமேட்டில் கைது செய்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். நினைவேந்தல் நாளில் அறவழியில் போராடுவதற்கு அனுமதி மறுத்ததோடு முன்னெச்சரிக்கை என்கிற பெயரில் கைது செய்துள்ளது சமுக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள மண்டபத்தில் அவர்களைத் தங்க வைத்தனர். மாலை 6 மணி அளவில் கைதானவர்களுடன் மு.தமிமுன் அன்சாரி ஐந்து நிமிடங்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்கும் பதாகை ஏந்தி நின்றார்.
''அமைதி வழியில் தமிழன் என்ற உணர்வோடு நினைவேந்தல் நாளில் அறவழியில் போராட அனுமதி மறுத்து கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. முதலமைச்சர் உடன் தலையிட்டு நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டுகிறேன்'' எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.