மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பர்மாவில் (மியன்மார்) வரலாற்று ஆய்வு குறித்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் யாங்கூனில், சூலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக்குழு (CMRSS) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் , மாலை நேர தமிழ் வகுப்பு நடத்தப்படுகிறது. அங்கு அவர் வருகை மேற்கொண்டார்.
அந்நாட்டில் பர்மிய மொழியில் மட்டுமே கல்வி தரப்படுகிறது. எனவே தமிழ் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
பர்மாவில் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுக்கும் வகையில், இவ்வமைப்பு நடத்தும் பாடசாலைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். வேலைக்கு செல்லும் இளைஞர்களும் இங்கு வருகின்றனர்.
சலாமத் என்ற தமிழ் ஆசிரியை கடந்த 9 ஆண்டுகளாக இங்கு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்துகிறார். அங்கு சென்ற தமிமுன் அன்சாரி, அந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தினார்.
தங்களுக்கு தெரிந்த திருக்குறளை கூறுமாறு அவர் கேட்க, மாணவ, மாணவிகள் தங்களுக்கு தெரிந்த குறளை கூறினர்.
பின்னர் தமிழின் சிறப்புகள் குறித்தும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் குறித்தும் அவர்களிடம் விளக்கினார். தாங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் படங்கள் மூலம் தமிழை கற்பதாகவும், சமூக இணையதளங்கள் வழியே தமிழக செய்திகளை அறிவா தாகவும் அவர்கள் கூறினர்.
தமிழ் கல்வி வளர்ச்சி மையம் என்ற சேவை அமைப்பு சார்பில் இவர்களுக்கு தமிழில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இங்கு தினமும் 45 பிள்ளைகள் படிக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கணிணி பயற்சியும் இங்கு வழங்கப்படுகிறது.
கடல் கடந்து தன்னார்வத்தோடு தமிழை வளர்க்கும் இந்த அமைப்பின் தலைவர் SKG அப்துல் காதர் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு மு.தமிமுன் அன்சாரி பாராட்டுகளை தெரிவித்ததோடு, தமிழகத்திலிருந்து இதற்கு எல்லா ஒத்துழைப்புகளையும் நல்குவதாகவும் தெரிவித்தார்.