தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைக்கு கடந்த அதிமுக ஆட்சியில், 2020 ஆம் ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த அவசரச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசிடம் அதன் அறிக்கையை கடந்த ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவை சார்பில் ஆன்லைன் விளையாட்டு தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநரும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இம்மசோதா மீது ஆளுநர் சில விளக்கங்களை கேட்ட நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கங்களை அளித்தார். ஆனாலும், ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரச் சட்டம் காலாவதி ஆனது. இதனால், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கோப்புகளில் கையெழுத்து இடுவது தொடர்பாக ஆளுநர்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருக்கும். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டு உள்ளார். அரசு அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பு ஆளுநர் முடிவு எடுப்பார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் விசயத்தில் ஏன் ஆளுநர் மீது மட்டும் திரும்பத் திரும்பக் குறை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கோப்பு வந்த உடனே அதைப் பற்றி தெரியாமலேயே ஆளுநர்கள் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்து போடும் உரிமையை எப்படி கொடுத்துள்ளதோ, அதேபோன்று ஆளுநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பாக அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது. அந்த உரிமையை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.