முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை- முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூச தினத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் அர்ச்சகர்களை கொண்டு திருத்தேர் உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறிய அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக் குமார சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்தார். வழக்கமான தைப்பூச நாட்களில் நடைபெறக்கூடிய தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை நான்கு ரத வீதிகளில் இழுக்கக் கூடிய நிகழ்வு நடைபெறும். கரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் தேரோட்ட நிகழ்ச்சியை கோவில் ஊழியர்கள் நடத்தி முடித்தனர்.
பழனி கோவில் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் பலரும் நாளை சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், மடங்களில் தங்கியும் இருப்பதால் பழனி நகரமே முருக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.