இன்று (24.01.2020) தை அமாவாசையை முன்னிட்டு, மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைந்து, தங்களை ஆசிர்வதிக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி திதி தர்ப்பணம் செய்து வருவதால் கடற்கரையில் கூட்டம் அலைமோதி வருகின்றது.
முன்னோர் வழிபாடு என்பது காலம் காலமாக தமிழனின் மரபில் உதித்த ஒன்று.! மதமாக பிரிவுப்பட்டாலும், இந்துக்கள் மட்டுமின்றி ஏனைய மதத்தாரும் விரும்பி பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பும் நாட்களில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை திதிகளே.! இந்நாட்களில் தங்களுடன் வாழ்ந்த மறைந்த மூதாதையர்கள் மற்றும் குலத்தின் மூதாதையர்களை எண்ணி அவர்களை நினைத்து நீர்நிலைகளில் திதி தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் அதே வேளையில், தங்களை ஆசிர்வாதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
இதன் காரணமாக 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி, அங்கேயே தர்ப்பணம் செய்துவிட்டு ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்த இந்தியா முழுவதும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், இன்று (24.01.2020) தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் அண்டை நாடான நேபாளத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் குவிந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். அத்துடன் இல்லாமல் 22 புனித கிணறு தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்த்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தண்ணீர் வசதி மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை போக்குவரத்து துறையும், மதுரையிலிருந்து சிறப்பு ரயில் வசதியும் தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த, மாவட்ட காவல்துறையும் 500- க்கும் மேற்பட்ட போலீசாருடன் ராமேஸ்வரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றது.