ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அப்துல்கனி ஜவுளி மார்க்கெட்டில் தினசரி கடைகள், வாரச் சந்தை கடைகள் என 700க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வந்த நிலையில், ஜவுளி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இட நெருக்கடி, கோர்ட் வழக்கு நிலுவை உள்ளிட்ட காரணங்களால் புதிய இடத்தில் கடைகள் அமைக்க முடியவில்லை. இதனால் தினசரி கடைகளும், வாரச் சந்தை கடைகளும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்து வருகின்றது.
இந்நிலையில், இன்று நடைபெற வேண்டிய வாரச் சந்தையானது 2வது வாரமாக நடைபெறவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த வாரத்தைப் போல பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் சாலையோரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் சாலையோரக் கடைகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டதோடு, சாலையோரக் கடைகளில் வியாபாரமும் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைகள் அமைக்கும் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.