Skip to main content

பொங்கல் பண்டிகை; களைகட்டும் ஜவுளி வியாபாரம்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

Textile business  booming Erode occasion of Pongal festival

 

ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லறை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 3ந் தேதி நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினார்கள். புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளதால் நேற்று ஜவுளி சந்தை களைகட்டியது.

 

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம்போல சில்லறை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாகவும் ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

 

சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கம்பளி, பெட்சீட், குழந்தைகளுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது. சில்லறை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்