செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்தில் இன்று (12/03/2022) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய கட்டுமான நிறுவனங்களின் 30வது மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித்தர முன்வர வேண்டும். அரசின் கட்டடங்களைத் தரமானதாகக் கட்டிக்கொடுக்க வேண்டும். கட்டுமானத் துறையினருக்கு கலைஞர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கட்டுநர்கள் இந்த நாட்டிற்கு முக்கியமானவர்கள்; மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பயணிக்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உட்கட்டமைப்பின் அடித்தளமாக கட்டுமான தொழில்துறை உள்ளது. முன்னேற்றத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் உறுதுணையாக அகில இந்திய கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. கரோனா காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் கட்டுமானத் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது". இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.