தென்காசி மாவட்டப் பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸும், ஒரு வார்டில் ம.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பாக தமிழ்ச்செல்வியும், போட்டி வேட்பாளராகக் கனிமொழியும் களமிறங்கினர். தமிழ்ச்செல்விக்கு 8 பேர் ஆதரவு தெரிவித்தனர். கனிமொழிக்கு 5 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்ற தமிழ்ச்செல்வி, தலைவராக வெற்றி பெற்றார். அன்றைய நாளில் இருந்து தற்போது வரை பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்விக்கும் 6 ஆவது வார்டு கவுன்சிலரான கனிமொழிக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல்கள் நீடித்து வருகிறது. அதே நேரம், தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழ்ச்செல்வி தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனின் சிபாரிசின் பேரில் பதவிக்கு வந்தவர் எனக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சிவபத்மநாபனின் ஆதரவாளராக இருந்த தமிழ்ச்செல்வி, நாட்கள் செல்லச் செல்ல பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்பான விவகாரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது ரூட்டை மாற்றிய தமிழ்ச்செல்வி, தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளரும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜா, மற்றும் முன்னாள் வடக்கு மாவட்டச் செயலாளரான கடையநல்லூர் செல்லத்துரை ஆகியோருடன் கைகோர்த்தார்.
அதன்பிறகு, இவர்களுடைய முழு ஆதரவும் தமிழ்ச்செல்வி பக்கம் திரும்பியது. இதையடுத்து, தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் 14 பேர்களில், 12 கவுன்சிலர்களின் ஆதரவு தலைவி தமிழ்ச்செல்வி பக்கம் திரும்பியிருக்கிறது. இதனால் தென்காசி திமுகவினர் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமை மற்றும் பாலியல் சித்ரவதைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதில், திமுகவும் கைகோர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தென்காசியில் உள்ள திமுக மகளிரணி சார்பில், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் மகளிரணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டிருந்த இந்தக் கூட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனும் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்வியும் பங்கேற்றிருந்தனர். இதற்கிடையில், கூட்டத்திற்குத் தலைமை வகித்த சிவபத்மநாபன் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்துப் பேசியிருந்தார். அப்போது, அவர் பேசி முடித்த பிறகு திடீரென மைக்கை வாங்கிய தமிழ்ச்செல்வி, “மணிப்பூர்ல பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டிச்சு நீங்க பேசுனீங்க. ஆனா தென்காசி மன்ற தி.மு.க.வுல பெண்களுக்குப் பாதுகாப்பில்லையே. அத பத்தி பேசுனீங்களா?" எனப் பகீர் கிளப்பினார். அப்போது, அவரைக் கண்டித்த சிவபத்மநாபன், "யம்மா இப்ப நடக்குறத பத்தி மட்டும் பேசுங்க. எந்த எடத்தல எத பேசணும்னு உங்களுக்கு தெரியாதா?. இந்த எடத்துல சம்பந்தமில்லாத விஷயத்த பேசாதீங்க. சம்பந்தம் இருக்குறத மட்டும் பேசுங்க” எனக் கோபமாகச் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அந்த நேரத்தில், பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வியின் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பும், பதில் பேச்சுகளும் கிளம்பின. இதனால் கூட்டத்தில் இருந்த திமுகவினருக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இத்தகைய சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்ட போலீசார், தலைவி தமிழ்ச்செல்வியைப் பத்திரமாக அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதே சமயம், தென்காசி மகளிரணிக் கண்டனக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்தக் கோஷ்டி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.