சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து மற்றும் ஒரு போலீஸ் சித்ரவதைச் சாவு சம்பவம் அம்பலமேறியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் வி.கே. புதூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ டிரைவர் ஆவர். சமூகத்தில் அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர். சுமாரான நிலையிலிருந்தாலும் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்பவர். ஆட்டோவில் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருப்பவர். திருமணமாகாதவர். தன் தோப்பிலிருந்து தேங்காய் காணவில்லை என்று அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் குமரேசன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
இதில் செந்தில் வசதியானவர். புகாரின் பேரில் மே- 8 ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் குமரேசன் அவரது தந்தை நவநீத கிருஷ்ணன் ஆஜராக, அப்போது எஸ்.ஐ.சந்திரசேகர் குமரேசனைக் கன்னத்தில் அடிக்க அவரது தந்தை நவநீத கிருஷ்ணன் தடுத்திருக்கிறார். பின்பு அங்குள்ள காவலர்கள் தலையிட்டு அவர்களை அனுப்பிவிட்டனர்.
ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற குமரேசனை 10- ஆம் தேதி விசாரணைக்கு வரசொல்லியிருக்கிறார் எஸ்.ஐ. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் விசாரணைக்கு வந்த குமரேசனைத்தான், எஸ்.ஐ. சந்திரசேகரும், காவலர் குமாரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின் அவர்களால் மிரட்டி அனுப்பப்பட்ட குமரேசன் தனியார் மருத்துவமனையிலும் பிறகு ஜூன் 13- ஆம் தேதி அன்று பாளை அரசு மருத்தவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 27.6.2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். பரவலாக விசாரிக்கையில் எஸ்.ஐ.யின் அடாவடிகள் இப்படியாக இருந்திருக்கின்றன.
எஸ்.ஐ. சந்திரசேகரும் காவலர் குமாருக்கும் ரகசிய கூட்டு உண்டு. இதில் எஸ்.ஐ. சந்திரசேகர் கரோனா லாக்டவுண் காலத்தை தனது வசூல் வேட்டைக்குப் பயன்படுத்திக் கொண்டார். காலை மற்றும் மாலை வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும் எஸ்.ஐ.சந்திரசேகர் ஓரக்கண்ணால் வி.கே. புதூர் கடைகளை நோட்டமிட்டபடியே வருவார். ஒரு ஓரத்தில் வேனை நிறுத்திவிட்டு காவலர் ஒருவரை அனுப்பி அவர் அன்று குறிவைத்திருக்கிற 5 கடைக்காரர்களையும் வரச் சொல்லுவாராம். அவர்கள் வந்த உடனேயே டீலிங்கை ஆரம்பித்துவிடுவார் எஸ்.ஐ.
ஒங் கடை முறைப்படியில்ல. சமூக விலகலில்லை. நேற்று 06.00 மணிக்குப் பதிலா 07.00 மணிக்குத்தான் கடையை அடைச்சிறுக்க. கேஸ் போடனும் உன்னோட ஆதார்கார்டு, கூட ஜாமீனுக்கு 2 பேரு அவங்க ஆதார் கார்டோட ஸ்டேஷனுக்கு வாவேய் என்று அதட்டலாகச் சொல்லிவிட்டு கிளம்புவார். யாராது கடைக 09.00 மணிக்கு வரை திறந்திருக்கலாம்னு அரசு அறிவிப்புன்னு எதிர்க்கேள்வி கேட்டால், என்னவே, டிபார்ட்மெண்ட் என்ன நெனச்சா. கடைய மூடி கேஸ் போட்டு உன்னைய உள்ள அடைச்சா நீ வெளியவே வர முடியாது என்பவர் அடுத்த நொடி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் அடி உரித்துவிடுவாராம் எஸ்.ஐ சந்திரசேகர்.
ஆதார் கார்டுடன் வான்னு சொன்னுதும் பாவம் வியாபாரிகள் பயந்துவிடுவார்கள். அதற்குள் எஸ்.ஐ.யின் புரோக்கர்கள் அந்தக் கடைக்காரரிடம் போய்விடுவார்கள். ஆதார் கார்டு கொண்டு வரச்சொன்னாரா.யே அந்த எஸ்.ஐ. மோசமானவம். கேஸ் போட்டார்னா நீ தப்பமுடியாது. நாம் பேசுரேன்னு அந்தக் கடைக்காரரிடம் மூவாயிரம் வாங்கிக் கொண்ட புரோக்கர் தன் பங்கிற்கு ஆயிரம் எடுத்துக் கொண்டு மீதமுள்ள இரண்டாயிரத்தை எஸ்.ஐ.யிடம் கொடுத்து நேர் செய்துவிடுவாராம்.
இப்படித்தான் வி.கே.புதூர் வீராணம் நகரங்களில் எஸ்.ஐ. சந்திரசேகர் லாக்டவுணைப் பயன்படுத்தி வசூல் ராஜாவாகவே வெறித்தனம் காட்டியிருக்கிறார். இவரால் பரிதாபம் கிராமப் புறமான வி.கே.புதூர் காவல் லிமிட்டில் வரும் பகுதிகளில் இவரால் பாதிக்கப்படாத கடைவாசிகளே கிடையாதாம். அத்தனை பேரும் பொறுமிக் கொண்டிருந்திருக்கிறார்கள். லாக்டவுண் வசூல் ராஜா இந்த வேட்டை மற்றும் அடி அராஜகம் பற்றி உளவுப் பிரிவினர் மூலம் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுகுணா சிங் வரை போனதில் கடுப்பான எஸ்.பி. எஸ்.ஐ. சந்திரசேகரைக் கடுமையாக எச்சரிக்கை செய்ததுடன் தண்டனையாக அவரை நான்கு நாட்கள் ஸ்டேஷன் பக்கம் வரக்கூடாது என்று பனிஷ்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
தண்டனைக் கெடுமுடிந்து திரும்பிய எஸ்.ஐ- க்கு பழைய புத்தி மீண்டும் திரும்பியதால், ஆட்டோ டிரைவர் குமரேசன் விஷயத்தில் சிக்கிக் கொண்டார். பாதிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகள் மக்கள் என்று அந்தக் காவல் சரகக் கிராமங்கள் திரண்டு நீதிகேட்டுப் போராடத் தொடங்கிவிட்டனர்.
குமரேசனிடம் கொடுப்பதற்குப் பணமில்லை. எஸ்.ஐ.யும் காவலர் குமார் இருவரும், குமரேசனை ஸ்டேஷனின் தனியறைக்குள் கொண்டு சென்றவர்கள். அவரை ஜட்டியுடன் தரையில் சப்பணமிட்டு அமரவைத்துள்ளனர். அவரின் இரண்டு கால் கப்பைகளையும் அகலமாக விரித்து அசையவிடாமல் மிதித்துக் கொண்டனர். தன் பூட்ஸ் காலால், குமரேசனின் அடிவயிறு உயிர்த்தலத்தில் மிதித்துத் தாக்கியிருக்கிறார். மரணவலியால் கதறிய குமரேசன் கும்பிட்டு விடச்சொல்லியும் மனமிரங்கவில்லையாம் எஸ்.ஐ.
அவரைக் குனிய வைத்து லட்டியால் வெளுத்திருக்கிறார். இந்தச் சித்ரவதையால் கல்லீரலும், சிறுநீரகமும் பாதிக்கட்ட குமரேசன் ரத்த வாந்தியெடுத்திருக்கிறார். இதனை புகார் மனுவாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய குமரேசனின் தந்தை நடவடிக்கை எடுக்க வேண்டியும் அது இல்லாமல் போயுள்ளது. பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த குமரேசன் அங்கு வாக்குமூலம் கொடுத்தவர் நேற்றிரவு (27/06/2020) 10.00 மணியளவில் மரணமடைந்திருக்கிறார்.
சாத்தான்குளம் சம்பவம், போலீஸ் டார்ச்சர் மரணங்களை அம்பலப்படுத்தி வருகிறது.