தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் நீர் வழிப்பாதையில் கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் நீர்வழிப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளதாக 2015 அன்று பெரு வெள்ளத்தின் போது சிறப்பு அதிகாரியான அமுதா வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடித்து அகற்றினார். ஆனால் மீண்டும் அதே நீர்வழிப்பாதையில் அங்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மீண்டும் நீர்வழிப்பாதையில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது. அதேபோல் அதே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்திருந்த தேவாலயம் ஒன்றின் சுற்றுசுவரும் இடித்து அகற்றப்பட்டது. கோவிலை இடிக்கும் வீடியோ காட்சிகளை விஷமிகள் சிலர் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகச் சமூகவலைத்தளத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பதிவிட்டு வரும் நிலையில் இவ்வாறு தவறாக பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தாம்பரம் காவல் ஆணையர் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.