தை மாதம் பிறந்தது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக கிராமங்கள் தோறும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 18 மந்தை மக்கள் சேர்ந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தி சம்பவம் பெரிய ஆச்சரியத்தையும், மனித நேயத்தையும் எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டாம்பட்டி அருகே பேர் நாயக்கனூர் உள்ளது. இங்கு பெருமாள்சாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் எருது ஓட்டம் நடைபெறும்.
இதற்காக ஊர் சார்பாக பூமிராஜ் என்பவர் காளை மாடு வளர்த்து வந்தார். திருவிழாக்காலங்களில் முக்கிய பண்டிகைகள் அன்று நடக்கும் எருது ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பெருமாள் சாமி கோயில் காளை சில ஆண்டுகளாக பல ஊர்களுக்குச் சென்று எருது ஓட்டப் போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்து மிகப்பெரிய பிரபலம் அடைந்தது.
அந்த பகுதிகளில் அந்த எருதை கொண்டாடி வந்தனர். இந்த எருது அந்த கோவிலுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் பெரிய மதிப்பையே ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில் வயது முதிர்வு உடல்நிலை பாதிப்பு காரணமாக பெருமாள் சாமி கோயில் காளை திடீரென இறந்தது.
கோவில் காளை இறந்த செய்தி அந்த பகுதி மக்களையே பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கோவில் காளையின் இறுதி நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் 18 ஊர்களுக்கும் 18 மந்தை சார்ந்த மக்களுக்கும் கோயில் காளை இறந்தது என தெரிவித்தனர்.
18 ஊர்மக்களும் மேளதாளத்துடன் வந்து இறந்த காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுமி, தேவர் ஆட்டம், கோலாட்டம், பெண்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செய்தனர். பின்னர் சடங்குகள் செய்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.