ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் அனுமதிக்காமல் இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு நேற்று (15-12-24) மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இளையராஜாவுக்கு மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சி மேடையில் இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட, ஜீயர்கள் மற்றும் அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார். கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இளையராஜா அவமதிக்கப்படவில்லை என்று கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்ததாவது, ‘கோயில் கருவறை முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் நிரந்தரமாக உற்சவ சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால், அதன் உள்ளே செல்ல ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதியில்லை. ஜீயருடன் வந்த இளையராஜா இது குறித்து அறியாமல் அர்த்தமண்டபத்திற்குள் சென்றுவிட்டார். அப்போது ஜீயர்கள், பட்டர்கள் இது குறித்து இளையராஜாவிடம் தெரிவித்தனர். அதன் பின்னர், இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார். இது வழக்கமான ஒன்று தான்’ எனத் தெரிவித்துள்ளார்.