கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ளது சொரையப்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு(50). இவரது கணவர் தேவராஜ் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மாலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்கு வந்து, உனது கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. பூஜை செய்தால் சரியாகி விடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அலமேலு வீட்டில் பூஜை செய்ய அனுமதித்துள்ளார். பூஜையின்போது அம்மனுக்கு தங்க நகை வைத்து பூஜிக்க வேண்டும் என அந்த ஆசாமி கூறியதை நம்பி, அலமேலு தமது காதில் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். பூஜை முடித்து மாலை வந்து தருவதாக நகையுடன் சென்றவர் மீண்டும் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப் பட்டத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த அலமேலு மணலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று(15.12.2024) சொரையப்பட்டு பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த சந்தேகப்படும்படியாக இருந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் காளியப்பன் 41 என்பதும், பூஜை செய்வதாக கூறி தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர் அலமேலுவிடம் நகையை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காளியப்பனை கைது செய்து, ஒரு பைக், 3 சவரன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.