புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கோமாபுரம். இது கால்நடைகள் அதிகம் வளர்க்கும் விவசாய கிராமம். இங்கு உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராம மக்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் மழைக்காலம் வந்தால் சுற்றுச்சுவர் இருந்தாலும் கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களது ஆடு மாடுகள் மழையில் நனைந்து விடாமல் இருக்க பள்ளி முழுவதும் உள்ள வராண்டாவில் மாடுகளை கட்டி வைத்துவிடுகின்றனர். இதனால் காலையில் பள்ளி வகுப்பறை வளாகம் முழுவதும் மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர் பரவிக்கிடக்கிறது.
விடிந்த பிறகும், கூட இந்த மாட்டுச் சாணங்களை அள்ளாமல் கிடப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாணத்தை தாண்டி தாண்டியே வகுப்பறைகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. வகுப்பறைகளிலும் இந்த துர்நாற்றத்தால் மாணவர்கள் உள்ளே இருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாட்கள் விடுமுறை முடிந்து இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல தடை தாண்டி செல்வது போல மாட்டுச் சாணத்தைத் தாண்டித் தாண்டியே சென்றுள்ளனர். அதன் பிறகே சாணம் அகற்றப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும் போது இது பள்ளிக்கூடமா? இல்லை மாட்டுக் கொட்டகையா? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒரு வண்டி சாணம் நிறைந்து கிடக்கும் இந்த வளாகத்தில் தான் மாணவர்கள் மதிய உணவும் உண்ண வேண்டிய அவல நிலை உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இங்கு மாடுகளை கட்டும் நபர்களிடம் பலமுறை சொல்லியும் பலனில்லையாம். இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று பரவிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே சரி செய்யவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது.