
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் குழுவினர் இன்று தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி தமிழகத்தில் வசிக்கும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என ட்வீட் செய்திருந்தார்.
அதையடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியான பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்கள் அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுமே போலியானவை. இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. அதிலொன்று பீகாரை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக்கொண்டது. ஆனால், இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் தமிழக தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். மேலும், பீகாரைச் சேர்ந்த மக்கள், பணி செய்யும் இடத்திற்கே சென்று அவர்களது பணி சூழ்நிலை மற்றும் வசதிகள் குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.