
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் அனைத்து இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்வி செலவு 50,000 வரை உயர்த்தப்படுவதாகவும், அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும், மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.