Skip to main content

ஆசிரியர் தினம்: ஸ்டாலின் வாழ்த்து

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
ஆசிரியர் தினம்: ஸ்டாலின் வாழ்த்து

‘ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி’
 
நாட்டின் கல்வி முன்னேற்றத்திலும், மாணவர்களின் அறிவுத் திறமையை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினம், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்களின் உன்னதமான பணியானது, இன்றைய தலைமுறையை மட்டுமல்ல, வருங்காலத்தில் புதிய தலைமுறைகளை உருவாக்குவதற்கும் மிக முக்கியமான பங்காற்றுகிறது.
 
ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, நாட்டின் முதல் குடிமகனாகவே உயர்ந்திட முடியும் என்பதை உலகுக்கே உணர்த்தியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமல்ல, சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரை தன் முத்திரையைப் பதித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து அம்பாஸடராகவும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவுமே நியமிக்கப்பட்டவர். அதனால்தான் அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக எழுச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் ஆசிரியர் பெருமக்கள் மட்டுமின்றி, அனைத்து மாணவ - மாணவிகளாலும் கொண்டாடப்படுகிறது. மேலும், எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்தப்படுகிறது.
 
திமுக அரசு இருந்தபோது, ஆசிரியர்களின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம், தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அகவிலைப் படிகள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்பட ஆசிரியர் சமுதாயத்திற்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.  திமுக ஆட்சிக் காலங்களில் 4 முறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டது.
 
“பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உலகத்திற்கு தேவையான கொள்கைகளையும், தத்துவங்களையும் வகுத்துக் கொடுக்கின்றன”, என்ற ஒரே கோட்பாட்டின் அடிப்படையில், அந்தக் கல்வி நிலையங்களுக்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடி நாம் அனைவரும் அவர்களை வாழ்த்துகிறோம். எனவே, மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கும், நாட்டின் அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கவும், தங்களின் வாழ்நாள் முழுவதும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்தாலும், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. ‘வாழ்க ஆசிரியர் தினம், வெல்க இளைஞர்களின் எதிர்காலம்!’

சார்ந்த செய்திகள்