கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி ஒன்றில் ஆங்கில இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் நித்யா என்பவர் தன்னுடைய பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் தமிழ் பாடப்பிரிவில் நேரடி வகுப்பில் படித்து விட்டு, பிறகு தொலைதூரக் கல்வியில் ஆங்கிலம் படித்து விட்டு, ஆங்கில இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருவதால் இவருக்கு பதவி உயர்வு வழங்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் தமிழ் பாடப்பிரிவில் நேரடி வகுப்பில் படித்து விட்டு, தொலைதூரக் கல்வியில் ஆங்கிலப் பாடப்பிரிவை முடித்துள்ளார். பின்னர் ஆங்கில இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளார். இதனால் இவருக்கு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வை அரசு அளிக்கவில்லை. நேரடி வகுப்பில் தமிழ் படித்துள்ளதால் இவரை தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு அரசு பரிசீலிக்கலாம். தொலைதூர வழியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் அல்ல. எனவே, மூன்று மாதங்களில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தொலைதூர வழியில் படித்துவிட்டு ஆசிரியர் பணிக்காக படித்து வரும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.