திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 180 மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளைக் கொண்டு அங்கிருக்கும் கழிவறைகளை சுத்தம் செய்யவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமாரி, இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளைக் கழிவறையைச் சுத்தம் செய்யவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பினாயில், பிளீச்சிங் பவுடர் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்த மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் கழிவறையைச் சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியரைக் கண்டித்துப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் தங்களை நாள்தோறும் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வதாகவும், மேலும் ஸ்டீபன் என்ற ஆசிரியர் அவர் சாப்பிடும் பாத்திரங்களைக் கழுவச் சொல்வதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு முற்றுகையிட்டிருந்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.