நெல்லையின் முருகன்குறிச்சியிலுள்ளது நெல்லை தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியின் நிலவள கூட்டுறவு வங்கி. அதன் தலைவர் பதவிக்கு சிட்டிங் தலைவரும் அ.தி.மு.க. புள்ளியுமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இன்று மதியம் வாக்கில் டி.டிவி அணியைச் சேர்ந்த இசக்கிபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகப் போயிருக்கிறார். அவரோடு டி.டி.வி அணியின் முன்னாள் துணை மேயர் கணேசனும் ஆதரவாளர்களோடு உடன் சென்றிருக்கிறார். இதனிடையே கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அ.தி.மு.க. அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன் மற்றும் கட்சியினர் அங்கே வந்திருக்கிறார்கள்.
அது சமயம் இசக்கிபாண்டியன் உறுப்பினர் படிவம் கேட்ட நேரத்தில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது கல் வீசப்பட்டதில் பரணி சங்கரலிங்கத்தின் தலையில் பட்டு மண்டை உடைந்தது. இதனால் இரண்டு தரப்புக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த அ.தி.மு.க.வின் தச்சை மாதவனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கைகளும் கிழிபட்டுள்ளன.
காயம்பட்ட பரணி சங்கரலிங்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். இது தொடர்பாக அ.தி.மு.க.வின் படப்பை சுந்தரத்தின் புகாரின் படி டி.டி.வி. அணியின் இசக்கிபாண்டியன், கணேசன் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.