Skip to main content

‘ஏம்ப்பா நீ எந்த ஊரு எம்.எல்.ஏ.’- டிஆர்பி ராஜாவை கலாய்த்த துரைமுருகன்

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

 

trp


மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தற்போது, நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக, கட்சித் தலைமையினால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  அதன் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட  கோத்தகிரியில் படுகர் இன மக்கள் வசிக்கும் கேசலாடா என்ற கிராமத்தில் ஆய்வுக்காக சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து  கட்சிப் பணிகள் குறித்து உரையாடிய சமயத்தில், அங்கு வந்த வயதான பெண்மணி என்னைப் போன்றவர்களுக்கு , அரசு அளித்து வந்த முதியோர் உதவித்தொகை கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப் பெறவில்லை என, எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிடம் முறையிட்டார்கள். 

 

tr

 

கட்சிப் பணிக்காக சென்ற எம்எல்ஏ ராஜாவோ , நமக்கென்ன என ஒதுங்கிக் கொள்ளாமல் உடனடியாக நீலகிரி மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட வருவாய் அலுவலரையும் தொடர்பு கொண்டு, அவர்களுக்குரிய பென்ஷன் தொகையை ஏன்  வழங்கவில்லை என  கேட்டதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாரியம்மாள், முத்தியம்மாள், ஆஸியம்மாள்,  சுசிலா (விதவை பென்ஷன்) நிச்சி மற்றும் லட்சுமி (முதிர்கன்னி பென்ஷன்) ஆகியோரை நேரடியாக தான் மறுநாள் பங்குபெறும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டத்திற்கு அழைத்து வரச்செய்து, மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட வருவாய் அதிகாரியிடமும் அரசின் உதவித்தொகை பெற ஆதாரங்களோடு முறையிட்டு தீர்வும் கண்டார்.  இதனை கவனித்துக் கொண்டிருந்த பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன்,  மன்னார்குடிக்கு மட்டும்தானே எம்எல்ஏ, இல்லை நீலகிரிக்குமா என தமாஷாக கேள்வி எழுப்பினார். 

 

இதுகுறித்து மன்னை எம்எல்ஏ டி.ஆர்.பி .ராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது,  அரசின் எந்த ஒரு திட்டமும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு கிடைக்கவேண்டும், கிடைக்கப் பெறவில்லை என்றால் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மாறிவிடும் எனவும், மேலும் மக்கள் பணி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதிக்குள் மட்டுமல்ல, நம் கண்ணில்படும், காதில் கேட்கும் எதையும், கண்டுகொள்ளாமல்  எளிதில் கடந்து விட முடியாது. ஏனென்றால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என சிம்பிளாக பதில் அளித்து விட்டு சென்றார்.


 

சார்ந்த செய்திகள்