கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை 35 நாட்களுக்கு பிறகு நாளை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்கக்கூடாது. மதுபானம் வாங்க வருவோர் 6 அடி சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை கொண்ட தடுப்பு வேலி வரைய வேண்டும். அந்த ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் மதுபான கடைகளில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கடை திறக்கும் போதும் கடைகளை மூடும் போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பணியாளர்கள் அவசியம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனை கடையின் வெளிப்புறத்தில் மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியில் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். சில்லறை வியாபாரம் மட்டுமே நடைபெற வேண்டும் மொத்தமாக யாருக்கும் மதுபானங்கள் வழங்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.