கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் ஒரு சமுதாய ஓட்டுகளை பெறுவது குறித்து இருவர் உரையாடலில் அந்த சமுதாய பெண்களை மிகவும் தரம் தாழ்ந்து இழிவாக பேசியிருந்தனர். அதனால் அதுதொடர்பாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துவிட்டு காவல்நிலையம் முற்றுகை போராட்டமும் 18-ம் தேதி இரவில் தொடங்கியது.
அந்த போராட்டம் விரிவடைந்து பொன்னமராவதி சுற்றியுள்ள 50 கிராமங்களில் பரவியதால் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டது. தடியடி கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் அடுத்த பகுதிகளிலும் மற்றும் பக்கத்துக் மாவட்டத்திலும் இந்த பிரச்சனை பற்றிக் கொண்டது.
மூன்றாவது நாளாக இன்றும் கந்தர்வகோட்டை, வம்பன், ஏம்பல், கரூர், இலப்பூர் மேட்டுச்சாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சாலை மறியல்கள் தொடங்கியுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.