கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதனால் ஏராளமானவர்கள் மதுவில் இருந்து மீண்டு வருகின்றனர். அதனால் அந்தக் குடும்பப் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை மீண்டும் மே- 7 ஆம் தேதி திறக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், போராட்டங்களும் நடந்து வருகிறது. ஆனால் அந்தப் போராட்டங்களுக்கும் பெண்களின் கண்ணீருக்கும் மதிப்பில்லை. சொன்னபடியே டாஸ்மாக் கடைகள் திறக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. ஒரு பக்கம் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு முன்பும் நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு 6 அடி இடைவெளியில் வட்டம் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது, மற்றொரு பக்கம் குடோன்களில் இருந்து மதுப்பாட்டில்கள் லாரிகளில் ஏற்றி டாஸ்மாக் கடைகளில் இறக்கப்படுகிறது.
திறக்கப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன் வரிசைகளைச் சரி செய்ய ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.