திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே இருக்கும் பழைய வத்தலக்குண்டை சேர்ந்த கார்த்தி டாஸ்மாக் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நடுவே பை ஒன்று கிடப்பதை கண்டார். அதில் தங்க நகை பெட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் தங்க நகைப் பெட்டியை கார்த்தி ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நகைப் பெட்டியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகை இருந்தது தெரிய வந்தது. புதிதாக வாங்கப்பட்ட நகையில் இருந்த ரசீதை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் காமன்பட்டி சேர்ந்த கவுதம் என்பவரின் நகை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சாலையில் கண்டெடுத்த 12 பவுன் தங்க நகையை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரியவரிடம் ஒப்படைத்தார். மேலும் சாலையில் கிடந்த தங்க நகையை மீட்டு வந்து போலீசிடம் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர் கார்த்தியை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை எஸ்.பி. வழங்கினார்.