தமிழ்நாடு முழுவதும் தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகள் புதைக்கப்பட்டுள்ளது. புதையுண்டுள்ள தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடுகளை மீட்டெடுக்க தனியார் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுகளைச் செய்து அகழாய்வு செய்ய கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் கட்டயன்காடு, ஒட்டங்காடு கிராமங்களில் உள்ள அய்யனார்கோயில் குளங்களில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி பொக்லைன் மூலம் மண் எடுக்கும் போது அடுத்தடுத்து முதுமக்கள் தாழிகள், கொடுமணலுக்கு ஒப்பான குறியீடுகளுடன் பானை ஓடுகள் வெளிப்பட்டது. இதைப்பார்த்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக் குழுவினர் தாழிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு வளையமிட்டு பாதுகாத்ததுடன் அதே ஊரைச் சேர்ந்த நெல்லை உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் ஒ.ஏ.எஸ்.-க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது சம்மந்தமாக தொல்லியல் ஆய்வு செய்ய சிவகுருபிரபாகரன் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை மேல் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவையடுத்து ஆய்வு மாணவர் கார்த்திகேயன் முதல்கட்ட மேலாய்வு செய்து குளத்தில் பல இடங்களிலும் புதையுண்டிருந்த தாழிகளை ஆய்வு செய்து பல்கலைகழகத்தில் அறிக்கை சமர்பித்துள்ளார். ஆய்வு மாணவரின் அறிக்கையையடுத்து பலகலைக்கழக ஆய்வு பேராசிரியர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்து அரசு அனுமதி கிடைத்தால் தோண்டி ஆய்வு செய்யலாம் என்று கூறிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தான் கட்டயன்காடு அய்யனார் குளத்தில் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த தாழிகளைக் குளம் வெட்ட ஒப்பந்தம் எடுத்தவர்கள் நேற்று தாழிகளை உடைத்து தூர் வாரிக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தாழிகளைக் காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.