தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களிமேடு பகுதிக்கு இன்று காலை 11.30 மணிக்கு நேரில் செல்கிறார். முதல்வர் நேரில் செல்வதுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தஞ்சை கோவில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.